‘எங்களை கைவிட்டு விடாதீர்கள்’ - ரஷித் கானின் உருக்கமான பதிவு!
ஆஃப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷித் கான். உலககின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இவர் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது நாட்டில் தாலிபான்களின் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டு வருவதாகவும், எங்களை காப்பாற்றுங்கள் என்றும் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளும் ஆக்கிரமித்திருந்தனர். பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், ஆஃப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்படும் என அறிவித்தார். அதே போல தற்போதைய அதிபர் ஜோ பைடனும் வாக்குறுதி கொடுத்தார். இதனையடுத்து ஆஃப்கானில் இருந்து பெருவாரியான அமெரிக்கப்படைகள் வெளியேறிவிட்டன.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாலிபான் தீவிரவாத அமைப்பு, ஆஃப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்நாட்டின் பலப்பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இதனை எதிர்த்து அரசுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் நடைபெற்று வரும் கடும் மோதலில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஷித் கான் உருக்கமான ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அவரது பதிவில் “உலகத் தலைவர்களே.. எனது தேசம் மிகப்பெரும் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் தினந்தோறும் கொன்று குவிக்கப்படுகிறார்கள். மக்களின் வீடுகள், சொத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்துள்ளார்கள். எங்களை இந்த பிரச்னையில் கை விட்டுவிடாதீர்கள். ஆஃப்கான் மக்களை கொல்வதை நிறுத்துங்கள், ஆஃப்கானிஸ்தானை அழிப்பதை விட்டுவிடுங்கள், எங்களுக்கு அமைதி தேவை” என குறிப்பிட்டுள்ளார்.
ரஷித் கானின் இந்த உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரஷித் கானுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.