IND vs SA, 2nd T20I: தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்!

Updated: Mon, Jun 13 2022 11:31 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் பின்தங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியானது 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணி சார்பாக டி காக்கிற்கு மாற்று வீரராக களமிறங்கிய கிளாஸன் 46 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரி என 81 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்று இருந்தார். ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியையும் வெற்றி பெற்றிருந்த தென்னாபிரிக்க அணியானது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 2-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் பெற்ற இந்தத் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தனது வருத்தத்தை வெளிப்படையாக பகிர்ந்து உள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டியில் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். புவனேஷ்வர் குமார் மற்றும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் முதல் 8 வரை சிறப்பாக பந்து வீசினார்கள்.

ஆனால் அதற்கு அப்புறம் எங்களுக்கு சாதகமாக எதுவுமே அமையவில்லை. போட்டியின் இரண்டாம் பாதியில் விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் முக்கியமான அந்த நேரத்தில் எங்களால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை கிளாசென் மற்றும் பவுமா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து விட்டனர்.

நாங்கள் இன்னும் நன்றாக பந்து வீச வேண்டியது அவசியம். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் இந்த தவறை திருத்திக் கொள்வோம் என்று நம்புகிறேன். மீதமுள்ள 3 போட்டிகளையும் நாங்கள் வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை