பாகிஸ்தான் அளவிற்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லை - அப்துல் ரஸாக்கின் சர்ச்சைப் பேச்சு!
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். சர்வதேச அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம்.
1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ஆம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது.
2013ஆம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியில் சுமூக உறவு இல்லாத நிலையில், 2013ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவே தவிர, இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை.
டி20 உலக கோப்பையில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தான் முதல் போட்டியில் மோதுகின்றன. அந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டியை காண ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அளவுக்கு இந்தியாவில் திறமையான வீரர்கள் இல்லாததால்தான் இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட பயப்படுவதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அப்துல் ரஸாக், “இந்தியாவால் பாகிஸ்தானுடன் போட்டி போட முடியும் என நான் நினைக்கவில்லை. திறமையின் அடிப்படையில் பார்த்தால் பாகிஸ்தான் தான் சிறந்த அணி. இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடாதது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. எந்தளவிற்கு வீரர்கள் அழுத்தத்தை சமாளித்து நெருக்கடியை எதிர்கொண்டு ஆடுகிறார்கள் என்பதை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் தான் பார்க்கமுடியும்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடக்காததால் தற்போது அதை பார்க்கமுடியவில்லை. எப்போதுமே, பாகிஸ்தான் அளவிற்கு திறமையான வீரர்களை இந்தியா பெற்றிருக்கவில்லை. இந்திய அணி நல்ல அணி தான். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். இந்தியாவில் நல்ல வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் வீரர்கள் அதிக திறமையானவர்களாக இருந்திருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு இம்ரான் கான்; இந்தியாவிற்கு கபில் தேவ். இவர்களில் இம்ரான் கான் தான் சிறந்த வீரர். அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு வாசிம் அக்ரம். அக்ரமுக்கு நிகரான வீரர் இந்தியாவில் இல்லை.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
எங்களுக்கு(பாகிஸ்தான்) ஜாவேத் மியான்தத்; அவர்களுக்கு(இந்தியா) கவாஸ்கர். இவர்களை ஒப்பிட முடியாது. அதன்பின்னர் எங்களுக்கு இன்சமாம், முகமது யூசுஃப், யூனிஸ் கான், அஃப்ரிடி; அவர்களுக்கு டிராவிட்,சேவாக். ஒட்டுமொத்தமாக பார்த்தால், பாகிஸ்தான் எல்லா காலக்கட்டத்திலுமே இந்தியாவைவிட சிறந்த வீரர்களை கொடுத்துள்ளது. இதுதான், இந்தியா பாகிஸ்தானுடன் ஆடாமல் ஒதுங்குவதற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.