தோல்வியிலிருந்து நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம் - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Dec 25 2023 12:14 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டெஸ்டாக செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிலும் குறிப்பாக தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். எனவே இத்தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்க வேண்டியது தம்முடைய வேலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “உலகக்கோப்பை தோல்வி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கடந்த காலத்தில் நடைபெற்ற அதிலிருந்து நாங்கள் நகர்ந்தாக வேண்டும். தற்போது உங்களுக்கு முன்பாக புதிய இலக்கு இருக்கிறது. நாங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்தே தோல்வியில் இருந்து எப்படி முன்னோக்கி நகர வேண்டும் என்பதை வலுக்கட்டாயமாக கற்றுள்ளோம். 

ஒவ்வொரு முறையும் நீங்கள் அவுட்டாகும் போது மீண்டும் அசத்துவதற்கு 2ஆவது இன்னிங்ஸ் காத்திருக்கும். எனவே கடந்த காலங்களில் சந்தித்த ஏமாற்றத்தை நீங்கள் உங்களுடனேயே வைத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை ஏமாற்றத்தை நீங்கள் வைத்திருந்தால் அது அடுத்த போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆம் நாங்களும் எங்களுடைய வீரர்களும் அதற்காக ஏமாற்றத்தை சந்தித்தனர். 

ஆனால் அதிலிருந்து நாங்கள் நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம். மேலும் இந்தியாவுக்காக விளையாட எங்களின் எந்த வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். எங்களுடைய வீரர்கள் உத்வேகத்தை குறைவாக கொண்டிருக்கிறார்கள் என்றும் நான் கருதவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ள நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். 

எனவே யாருக்கும் நான் உத்வேகத்தை கொடுக்க வேண்டும் என்று கருதவில்லை. பொதுவாக உத்வேகத்தை கொடுப்பதை விட நல்ல சூழல், சரியான செயல்பாடுகள், பயிற்சிகள் ஆகியவற்றை எங்களுடைய வீரர்களுக்கு கொடுப்பதையே நான் நம்புகிறேன். இது தான் ஒரு பயிற்சியாளராக எங்கள் வீரர்களை வெற்றிகரமாக செயல்பட வைப்பதற்கான என்னுடைய வேலையாகும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை