ருதுராஜ் கெய்க்வாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து பேசிய ராகுல் டிராவிட்!

Updated: Mon, Feb 21 2022 16:00 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டையுமே வைட் வாஷ் செய்தது இந்திய அணி. நேற்று பெற்ற வெற்றியின் மூலம் 6 வருடங்களுக்கு பிறகு ஐசிசி டி20 அணிகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை மீண்டும் இந்தியா பிடித்துள்ளது.

ஆனால் இந்த தொடர் இளம் வீரர் ஒருவருக்கு மட்டும் சோதனை காலமாக இருந்தது. அது சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் தான். நியூசிலாந்து தொடர், தென் ஆப்பிரிக்க தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர் என தொடர்ந்து அவர் ப்ளேயிங் 11இல் வாய்ப்பு கிடைக்காமலேயே ஏங்கி வருகிறார்.

நேற்று நடந்த 3ஆவது டி20 போட்டியில் மட்டும் விராட் கோலி விலகியதால் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரால் எடுத்தவுடனேயே சிறப்பாக செயல்பட முடியவில்லை. 4 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். எனவே ஒரே ஒரு போட்டியை வைத்து மட்டும் இலங்கை தொடரில் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்காது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “இது மிகவும் கடினமான ஃபார்மட் கிரிக்கெட் ஆகும். ருதுராஜ், ஆவேஷ் கான் யாராக இருந்தாலும், ஒரே ஒரு போட்டியை வைத்து நாங்கள் முடிவுக்கு வரமாட்டோம். ஒவ்வொரு வீரருக்கும் எந்தளவிற்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட முடியுமோ, அந்த அளவிற்கு தந்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் சில போட்டிகளில் தொடர்ந்து விளையாடினால் தான் அவர்களின் தன்மையை புரிந்துக்கொள்ள முடியும்.

ருதுராஜ் கெயிக்வாட்டின் சிறந்த ஆட்டம் காரணமாகவே அணிக்குள் இருக்கிறார். இல்லையென்றால் அணிக்குள்ளேயே சேர்க்கப்பட்டிருக்க மாட்டார். அதற்காக அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்பது கடினமான ஒன்றாகும். முடிந்தளவிற்கு அனைவருக்கும் நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைக்கும்.

அணியை வெறும் 15 வீரர்களுடன் பழக்கப்படுத்த நாங்களும் விரும்பவில்லை. உலகக்கோப்பை தொடருக்குள் ஒவ்வொரு வீரரும் குறைந்தது 15 - 20 போட்டிகளை விளையாடியவர்களாக இருக்க வேண்டும். அந்த பணிகள் தான் தற்போது நடந்து வருகிறது. சரியான நேரத்தில் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதன்படி அனைவருக்குமே நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை