துலீப் கோப்பை 2024: சஞ்சு சாம்சன், அபிமன்யூ ஈஸ்வரன் சதம்!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு சுற்று ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மூன்றாம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. அதன்படி இன்று தொடங்கிய 5ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்த்து அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணி விளையாடியது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய டி அணியானது தேவ்தத் படிக்கல் 50, ஸ்ரீகர் பரத் 52, ரிக்கி புய் 56 ஆகியோரது அரைசதங்கள் மூலமும் சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தின் மூலமும் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை சஞ்சு சாம்சன் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 89 ரன்களுடனும், சரனேஷ் ஜெய்ன் 26 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் தனது சதத்தை அடித்து அசத்தினார்.
அதேசமயம் மறுபக்கம் சரனேஷ் ஜெய்ன் 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, தொடர்ந்து அதிரடி காட்டி வந்த சஞ்சு சாம்சனும் 12 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 349 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா பி அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பி அணிக்கு கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார்.
ஆனால் மறுபக்கம் விளையாடிய வீரர்களில் ஜெகதீசன் 13 ரன்களுக்கும், சுயாஷ் பிரபுதேசய் 16 ரன்களுக்கும், முஷீர் கான், சூர்யகுமார் யாதவ், நிதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிமன்யூ ஈஸ்வரன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 113 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அபிமன்யூ ஈஸ்வரனும் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா பி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைச் சேர்த்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இதில் வாஷிங்டன் சுந்தர் 39 ரன்களுடனும், ராகுல் சஹார் ரன்கள் ஏதுமின்றியும் என களத்தில் உள்ளனர். இந்தியா டி அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், ஆதித்யா தக்கரே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 139 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா பி அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.