துலீப் கோப்பை 2024: இஷான் கிஷன், இந்திரஜித் அசத்தல்; வலிமையான நிலையில் இந்தியா சி அணி!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று தொடங்கிய நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் இணைந்த சாய் சுதர்ஷன் - ராஜத் பட்டிதார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் சுதர்ஷன் 43 ரன்களிலும், ராஜத் பட்டிதார் 40 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - பாபா இந்திரஹித் இணை இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்த, மறுபக்கம் பாபா இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 111 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜிதும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் இந்தியா சி அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்துள்ளது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களுடனும்,மனவ் சுதர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா பி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.