SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Jan 15 2023 22:10 IST
Image Source: Twitter

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் வியான் முல்டர் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய மேயர்ஸ் 23 பந்துகளில் 6 பவுண்டரில் ஒரு சிக்சர் என 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து முல்டருன் இணைந்த கேப்டன் டி காக் களத்திற்கு வந்தது முதலே பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்துபடைத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய வியான் முல்டர் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதைத்தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த குயின்டன் டி காக் 31 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி ஓவரை எதிர்கொண்ட ஹென்ரிச் கிளாசென் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி அசத்தினார். 

இதன்மூலம் ஹென்ரிச் கிளாசென் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி, எவான் ஜோன்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் 2 ரன்னிலும், லூப் 18 ரன்னிலும், கேப்டன் டேவிட் மில்லர் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மற்றொரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராயும் 33 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஈயன் மோர்கன் - டேன் விலாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய மோர்கன் அரைசதம் கடந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விலாஸ் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்திருந்த மோர்கனும் 64 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே எடுத்தது. டர்பன் அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை