எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!

Updated: Tue, Jan 16 2024 12:36 IST
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு குயின்டன் டி காக் - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே தடுமாறிய குயின்டன் டி காக் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து கடந்த போட்டியில் சிக்சர் மழை பொழிந்த ஜேஜே ஸ்மட்ஸ் 6 ரன்களிக்கும், அடுத்து  வந்த வியான் முல்டர் 12 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இணைந்த கிமோ பால் - ஹென்ரிச் கிளாசென் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் கீமோ பால் 17 ரன்களிலும், அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 15 ரன்களுக்கும் என நடையைக் கட்ட, மறுபக்கம் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீசா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டூ பிளெசிஸ் 7 ரன்களுக்கும், ரோனன் ஹெர்மான் 6 ரன்களிலும், லூயிஸ் டூ ப்ளூய் ஒரு ரன்னிலும் என விக்கெடை இழந்தனர். அதன்பின் இணைந்த ரீசா ஹென்றிக்ஸ் - மொயீன் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரீசா ஹென்றிக்ஸ் 38 ரன்களிலும், மொயீன் அலி 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய டொனவன் ஃபெரீரா, ரொமாரியோ செப்ஃபெர்ட், டேவிட் வைஸ் போன்ற நட்சத்திர வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே சேர்த்தது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், ரிச்சர்ட் கிலீசன், கேப்டன் கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை