டிஒய் பாட்டில் டி20: மிரட்டிய தினேஷ் கார்த்திக்; ஐபிஎல்-ல் சம்பவம் நிச்சயம்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடக நிறுவனத்திற்காக வர்ணனை பணியை தினேஷ் கார்த்திக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்கள் முன்கூட்டியே முடிந்த நிலையில் டிஒய் பாட்டில் டி20 கோப்பை தொடரில் அவர் விளையாடி உள்ளார்.
ஆர்பிஐ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 75 ரன்களை தினேஷ் கார்த்திக் விளாசித்தள்ளினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 197.37 ஆகும். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இது எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு அவர் தயார் என சொல்லும் வகையில் உள்ளது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அந்த இலக்கை விரட்டிய ஆர்பிஐ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது. தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி இன்னிங்ஸ் குறித்து சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.