இந்திய தொடரில் இருந்து விலகும் முடிவில் ஆர்ச்சர்; ஆதரவு தரும் இசிபி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் காயம் காரணமாக கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அவரது காயம் குறித்து 4 வாரத்திற்கு பின் ஆய்வு செய்து அணிக்கு எப்போது திரும்புவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகிவிட்டார். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு அவரை தயார் செய்ய இங்கிலாந்து விரும்புகிறது.
ஆனால், முழுமையாக உடல் தகுதி பெற்று உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட இருப்பதாக ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறுகையில் ‘‘நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டபின், உடனடியாக அணிக்கு திரும்பக் கூடாது என தீர்மானித்துள்ளேன். ஏனென்றால், என்னுடைய முக்கிய கவனம், இங்கிலாந்து அணிக்காக டி20 உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான்.
இரண்டும்தான் என்னுடைய இலக்கு. இந்திய தொடருக்கு நான் தயாராகிவிட்டால், விளையாடுவேன். அப்படி இல்லை என்றால், கோடைக் காலத்திற்கு பிறகு சிறந்த வகையில் தயாராகி விடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய ஆஷ்லே கில்ஸ் கூறுகையில், ஆர்ச்சரின் உடல்நிலை குறித்து நாங்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். மேலும் அவர் குணமடைந்துவிட்டால் நிச்சயம் இந்திய தொடரில் விளையாடுவார்.
ஒருவேளை அவருக்கு ஓய்வு தேவைப்படுமேயானால் அவர் இந்திய தொடரிலிருந்து ஓய்வளிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.