எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!
இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்திய ஏ - வங்கதேசம் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் சாய் சுதர்ஷன் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிகின் ஜோன்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் யாஷ் துல் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய நிஷாந்த் சந்து 5 ரன்களுக்கும், ரியான் பராக் 12 ரன்களுக்கும், துருவ் ஜூரெல், ஹர்ஷித் ரானா என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து அசத்திய யாஷ் துல் 66 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 49.1 ஓவர்களில் இந்திய ஏ அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஹசன் ஷாகிப், ரகிபுல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் முகமது நைம் - டான்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் முகமது நைம் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த டான்ஸித் ஹசனும் 51 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் வந்த ஸாகிர் ஹசன் 5 ரன்கள், சைஃப் ஹொசைன் 22, மஹ்முதுல் ஹசன் 20, சௌமியா சர்கார் 5, அக்பர் அலி 2, மெஹிதி ஹசன் 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் 34.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 5 விக்கெட்டுகளையும், மனவ் சுதர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடவுள்ளது.