ENG vs AUS, 4th ODI: ஆஸ்திரேலியாவை பந்தாடி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்கும் முன்னரே மழை நீடித்த காரணத்தினால் முதலில் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு டாஸ் வீசப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. அதன்பின் போட்டி தொடங்க இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டியானது 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸ் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் ஹாரி ப்ரூக் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.
பின்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹாரி ப்ரூக்கும் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து விளையாடி வந்த ஜேமி ஸ்மித்தும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தேல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த லிவிங்ஸ்டோன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
மேற்கொண்டு மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 28 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தேல் 12 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 313 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிட ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 28 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 8 ரன்களுக்கும், மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி 13 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்களுக்கும், சீன் அபோட் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 24.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.