ENG vs IND : அன்று கோலி; இன்று ராகுல்! ‘மூடிகளை வீசி ரகளையில் ஈடுபட்ட பார்வையாளர்கள்’
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ஆம் தெதி தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களை குவித்த நிலையில், இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையல், இப்போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (ஆக. 14) இந்திய வீரர் கே.எல். ராகுல் பவுண்டரி லைன் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர், அவர் மீது பாட்டில் மூடிகளை (Cork) எறிந்துள்ளனர். இச்சம்பவத்தால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டத்து. இதற்கு ரசிகர்கள், வர்ணனையாளர்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போட்டி நடுவர்களிடம் இந்திய அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற செயல்கள் ஒன்றும் புதிதல்ல.
கடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி பல ரிவ்யூ வாய்ப்புகளை தவறாக கேட்டதற்காக இங்கிலாந்து பார்வையாளர்கள், மைதானத்தில் கூச்சல் எழுப்பி பகடி செய்தனர். இதே போன்று கடந்த 2019 ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை 'சீட்டர்' (Cheater) என கூச்சலிட்டு அநாகரிமான முறையில் பகடி செய்த சம்பவமும் நடந்தேறியது.
இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் கேப்டன் கோலியின் பதில்தான். ராகுல் மீது வீசப்பட்ட மூடியை அவர் கையில் எடுத்ததை பார்த்த கோலி, அதை திருப்பி பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பக்கமே வீசியெறியும்படி கூறியதுதான். இது கேமாராவில் பதிவாகியுள்ளது.
மேலும் கே.எல். ராகுல் இந்தப் போட்டியில் 129 ரன்களை குவித்து லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த பத்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.