ENG vs IND, 3rd ODI: ஹர்திக், சஹால் பந்துவீச்சில் 259 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இதையடுத்து 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோர் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதனைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராயும் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் - மொயின் அலி இணை சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். இதில் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 34 ரன்களில் மொயீன் அலியும், 27 ரன்களில் லியாம் லிவிங்ஸ்டோனும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் 60 ரன்கள் எடுத்திருந்த ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்தார்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஹர்திக் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 45.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.