வெளிநாட்டில் வெற்றிபெறுவது என்றும் ஸ்பெஷலானது - விராட் கோலி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவிக்க இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 298 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய பரபரப்பான ஐந்தாவது நாளில் கிடைந்த குறைந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 120 ரன்களில் சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி “எங்களது பந்து வீச்சாளர்களால் 60 ஓவர்களில் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் ஆக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸின் போது எங்களது ஆட்டத்தை நாங்கள் சிறப்பாக வெளிப்படுத்தினோம். களத்தில் நடந்த சில பதற்றமான சம்பவங்கள் எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களே காரணம். அவர்கள் பந்து வீசிய விதம் இங்கிலாந்து வீரர்களை திணறடித்து.
கடந்த முறை லார்ட்ஸ் டெஸ்டில் தோனியின் தலைமையின் கீழ் வெற்றிபெற்ற போது ஸ்பெஷலாக இருந்தது. இம்முறை 60 ஓவர்களில் அவர்களை வீழ்த்தியது இன்னும் ஸ்பெஷலானது. குறிப்பாக இந்த போட்டியில் சிராஜ் அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை சாய்த்தது எங்களுக்கு வெற்றியை கொடுத்தது. எப்போதும் வெளிநாடுகளில் பெரும் வெற்றி என்பது சிறப்பான ஒன்று” என தெரிவித்துள்ளார்.