ENG vs IRE, 2nd ODI: கடைசி வரை ஆட்டம் காட்டிய அயர்லாந்து; இங்கிலாந்து வெற்றி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நாட்டிங்ஹாமில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சால்ட் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த பென் டக்கெட்டும் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் ஜேக்ஸும் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் வந்த சாம் ஹைம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் ஜெமி ஸ்மித் 9 ரன்களுக்கும், பிரைடன் கார்ஸ் 32 ரன்களுக்கு, ரெஹான் அஹ்மத் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் ஹைமும் 89 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி 14 ரன்களுக்கும், பால் ஸ்டிர்லிங் 14 25 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த கர்டிஸ் காம்பேர், லோர்கன் டக்கர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த ஹாரி டெக்டர் - ஜார்ஜ் டக்ரெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் ஹாரி 39 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஜார்ஜ் டெக்ரெல் 43 ரன்களுக்கு, அடுத்து வந்த ஆண்டி மெக்பிரைன், மார்க் அதிர் ஆகியோர் சொற்ப ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் வந்த பேரி மெக்கர்த்தி - கிரேக் யங் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இங்கிலாந்து அணிக்கும் கடும் நெருக்கடியைக் கொடுத்தனர். இதில் பேரி மெக்கர்த்தி 41 ரன்களிலும், ஜோஷுவா லிட்டில் 29 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அயர்லாந்து அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ரெஹன் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் ஸ்கிரிம்ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.