ENG vs NZ, 1st Test: நியூசிலாந்து 132 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து தடுமாற்றம்!
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். முதலில் வில் யங் (1) விக்கெட்டையும், அடுத்தது டாம் லாதம் (1) விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய டெவான் கான்வேவை (3) ஸ்டுவர்ட் பிராட் வீழ்த்தினார்.
இதன்பிறகு, அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மேத்யூ பாட்ஸ் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். கேன் வில்லியம்சன் (2), டேரில் மிட்செல் (13), டாம் பிளண்ட்வெல் (14) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்ததால், நியூசிலாந்தால் பாட்னர்ஷிப்பை கட்டமைக்க முடியவில்லை. பின்னர், கைல் ஜேமிசன் (6), அதிரடியாக விளையாடிய டிம் சௌதி (26) ஆகியோரை மீண்டும் ஆண்டர்சன் வீழ்த்தினார். கடைசி இரண்டு விக்கெட்டுகளை முறையே மேத்யூ பாட்ஸ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினர்.
நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிய காலின் டி கிராண்ட்ஹோம் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்தார்.
இதன்மூலம், 40 ஓவர்கள் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மற்றும் பாட்ஸ் தலா 4 விக்கெட்டுகளையும், பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - அலெக்ஸ் லீஸ் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதன்பின் 43 ரன்களை எடுத்திருந்த கிரௌலி, சௌதீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப், ஜோஸ் ரூட் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் பொறுமையாக விளையாடிவந்த அலெக்ஸ் லீஸ் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய மேட்டி பாட்ஸும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் பென் ஃபோக்ஸ் 6 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.