ENG vs NZ, 1st Test Day 3: ரூட், ஸ்டோக்ஸ் அரைசதத்தால் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 9 ரன்கள் முன்னிலைப் பெற்று 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்பிறகு, நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதன் தொடக்கமும் நியூசிலாந்துக்கு மோசமாக அமைந்தது. வில் யங் (1), கேப்டன் கேன் வில்லியம்சன் (15), டாம் லாதம் (14), டெவான் கான்வே (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதன்பிறகு, டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளன்ட்வெல் சிறப்பான பாட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய இருவரும் 2aaம் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட்டுகள் விழாதவாறு பார்த்துக்கொண்டனர். இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மிட்செல் 97 ரன்களுடனும், பிளன்ட்வெல் 90 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், 3ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தாமதத்துக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியது. 3ஆம் நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மிட்செல் சதத்தை எட்டினார்.
சதத்தைக் கடந்து 108 ரன்கள் எடுத்திருந்த மிட்செல், ஸ்டுவர் பிராட் வீசிய 84ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து பந்திலேயே புதிதாகக் களமிறங்கிய காலின் டி கிராண்ட்ஹோம் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, கைல் ஜேமிசன் களமிறங்கினார். அவரும் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.
இது இங்கிலாந்து ஒரு அணியாக வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டாகவும் பதிவானது. அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் பிளெண்டல் 94 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
இதனால் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மாட்டி பார்ட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். ஆனால் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஸாக் கிரௌலி 9 ரன்களிலும், ஒல்லி போப் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசததினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி எளிதாக இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 54 ரன்கள் சேர்த்திருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைச் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 77 ரன்களுடனும், பென் ஃபோக்ஸ் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.