ENG vs NZ, 2nd T20I: பேர்ஸ்டோவ், ப்ரூக் காட்டடி; நியூசிலாந்துக்கு 199 டார்கெட்!
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வில் ஜேக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மாலனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜானி பேர்ஸ்டோவுடன் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் இணைந்தார். இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ள, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்று தெரியமால் திணறினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக்கும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி ப்ரூக் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயீன் அலியும் சிக்சர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், அடுத்த பந்தையும் சிக்கர் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமும் குறைந்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 86 ரன்களை குவித்தார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.