மாலன், பேர்ஸ்டோவ் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசாம் பெரேரா முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 51 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ், இசுரு உதான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிங்ஸ்டோன், சாம் பில்லிங்ஸ், ஈயன் மோர்கன், மோயீன் அலி என வந்தவேகத்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த டேவிட் மாலனும் 76 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது.
இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்யவுள்ளது.