ENG vs SL, 3rd T20: இலங்கையை பந்தாடி ஆபார வெற்றியை ருசித்த இங்கிலாந்து!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீசியது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது அபார ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக டேவிட் மாலன் 76 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இப்போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 18.5 ஓவர்களில் இலங்கை அணி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.