இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி டாமி பியூமண்ட் 7 ரன்களிலும், எம்மா லாம்ப் 12 ரன்களிலும், சோபியா டாங்க்லி 29, ஆலிஸ் கேப்ஸி 19 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வையட் 43 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஆலிஸ் கேப்ஸி அரைசதம் கடந்து அசத்தினார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 228 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக பேட்டிங் செய்து 91 ரன்களை குவித்தார். சிறப்பாக பேட்டிங் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வெர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய யஸ்திகா பாட்டியா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். யஸ்திகா 50 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 74 ரன்களை குவித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
இதன்மூலம் 45ஆவது ஓவரில் இலக்கை அடித்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.