ENG vs IND: வரலாற்று வெற்றி குறித்து ஸ்டோக்ஸ் பெருமிதம்!

Updated: Tue, Jul 05 2022 19:25 IST
Image Source: Google

இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்துள்ளது.

5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜோ ரூட், பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மறக்க முடியாத வெற்றியை வழங்கினார்கள். 76.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து மகத்தான வெற்றியை அடைந்தது இங்கிலாந்து அணி. 

இதில் ஜோ ரூட் 142, பேர்ஸ்டோ 114 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. 2007-க்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. ஆனால் ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் மிகச் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணி 5-வது டெஸ்டை வெல்ல உதவியுள்ளார்கள். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 4ஆவது இன்னிங்ஸில் அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்கிற புதிய சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணி 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்களை விரட்டி வெற்றி பெற்றது இந்த டெஸ்டில் தான். 

வரலாற்று வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “வீரர்களால் எனது வேலை சுலபமாகி விடுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்துவிட்டால் எந்த இலக்கையும் அடைய முடியும். 5 வாரங்களுக்கு முன்பு 378 என்கிற இலக்கு அச்சத்தை அளித்திருக்கும். எவ்வளவு ரன்களை விரட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை. 

விக்கெட்டுகள் எடுப்பது தான் முக்கியம். சில நேரங்களில் மற்ற அணிகள் எங்களை விட சிறப்பாக விளையாடலாம். ஆனால் எங்களை விடவும் துணிச்சலுடன் யாரும் இருக்க முடியாது. இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்கிற அணுகுமுறையை மாற்ற விரும்புகிறோம். 

பத்து விக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என்பது மிக முக்கியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க எண்ணுகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரப் போகிறோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை