ENG vs NZ, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில்டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாது அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டெவான் கான்வே 3 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலனும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ஒருபக்கம் விக்கெட் இழக்காமல் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் களமிறங்கிய மார்க் சாப்மென், டெரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளென் பிலீப்ஸும் 41 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜோடி சேர்ந்த ஆடம் மில்னே - இஷ் சோதி இணை ஓரளவு தாக்குப்பிடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் லுக் வுட், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வில் ஜேக்ஸ் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேர்ஸ்டோவ் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான வில் ஜேக்ஸும் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - ஹாரி ப்ரூக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் டேவிட் மாலன் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஹாரி ப்ரூக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.