ENG vs SA, 1st T20I: பேர்ஸ்டோவ், மொயின் அலி அசத்தல்; இங்கிலாந்து அபார வெற்றி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டேவிட் மில்லர் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் 22 ரன்னிலும், ஜேசன் ராய் 8 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் 40 ரன்கள் சேர்த்திருந்த மாலன் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த மொயீன் அலியும் அபாரமாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் 2, ரொஸ்ஸொவ் 4, கிளாசென் 20, டேவிட் மில்லர் 8 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதற்கிடையில் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அரைசதம் கடந்த கையோடு, 57 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதிநேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்சர்களை பறக்கவிட்டு 72 ரன்களைச் சேர்த்தார். ஆலும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.