பாகிஸ்தான் 333 ரன்னில் ஆல் அவுட்; ஸ்டப்ஸ், முன்னிலை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்க அணி!

Updated: Tue, Oct 21 2025 21:12 IST
Image Source: IANS

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

அதன்பின் 57 ரன்களில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பாபர் ஆசாமும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார்,  பின்னர் இந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷான் மசூத்தும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வானும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதன் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை  சௌத் ஷகீல் 42 ரன்களுடனும், சல்மான் ஆகா 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் சௌத் ஷகீல் அரைசதம் கடந்தார். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சல்மான் ஆகா 45 ரன்னில் விக்கெட்டை இழக்க, 66 ரன்களைச் சேர்த்த நிலையில் சௌத் ஷகீலும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளையும், சிமோன் ஹார்மன் 2 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Also Read: LIVE Cricket Score

பின் 55 ரன்களை எடுத்த நிலையில் ஸோர்ஸி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்துள்ளது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி, சஜித் கான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 148 ரன்கள் பின் தங்கிய நிலையில், நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை