டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!

Updated: Sat, Nov 05 2022 17:04 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1 இல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 9 ரன்னிலும் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த சனகா 3, ராஜபக்சா 22, ஹசரங்கா 9, கருரத்ணே 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பட்லர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 48 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ஹேரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கரண என அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஆனால் கடைசி வரை விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியை முந்தி இரண்டாவது அணியாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை