ENG vs WI, 3rd Test: பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!

Updated: Sun, Jul 28 2024 20:01 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 26 பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் பிராத்வைட் 61 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி ஜேமி ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலமாக 376 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத்வைத் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை மைக்கேல் லூயிஸ் 18 ரன்களுடனும், அலிக் அதானாஸ் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அலிக் அதானாஸ் 12 ரன்களுடன் நடையைக் கட்டினாலும் மறுபக்கம் மைக்கேல் லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் லூயிஸும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கவேம் ஹாட்ஜ் அரைசதம் கடந்து 55 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 82 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒருபக்கம் நிதானம் காட்டினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் இங்கிலாந்து அணியானது வெறும் 7.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், பென் டக்கெட் 4 பவ்ண்டரிகளுடன் 25 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியதுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை