பென் ஸ்டோக்ஸ் வரும் போது அவரை வரவேற்க முதல் ஆளாக வரவேற்பேன் - கிறிஸ் சில்வர்வுட்
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. ஏறக்குறைய தோல்வி என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடினமாக போராடி கம்பேக் கொடுத்து அசத்தல் இந்திய அணி வெற்றிப் பெற்றது.
இதனால் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் தவிர, வேறு எவரும் சிறப்பாக பேட் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆனால் கடும் மன அழுத்தம் காரணமாக, பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி ஓய்வில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இக்கேள்விக்கு பதிலளித்த கிறிஸ் சில்வர்வுட், "அணியில் மீண்டும் வந்து இணையுமாறு பென் ஸ்டோக்ஸ் மீது எந்த அழுத்தமும் வைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் காத்திருப்பேன், அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவரே என்னிடம் தெரியப்படுத்துவார். அதுவரை நிச்சயம் காத்திருப்போம்.
இப்போது பென் ஸ்டோக்ஸ் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பம் நலமாக உள்ளது, அவர் வலுவாக திரும்பி வருவார், அவர் மீண்டும் அணிக்குள் நுழையும்போது, நாம் அவரிடம் என்ன எதிர்பார்கிறோமோ அதை அவர் இங்கிலாந்துக்காக செய்து முடிப்பார். நான் நிச்சயமாக அவரின் பதிலுக்காக காத்திருக்கவில்லை.
அது சரியான விஷயம் என்று நான் நினைக்கவில்லை. அவரைச் சுற்றி நிறைய பேர் இருக்கின்றனர். அவர்கள் அவரை ஆதரிக்கிறார்கள். அவர் மீண்டும் அணிக்குள் வரத் தயாராக இருக்கும்போது, நாங்கள் அவரை இரு கைகளை கூப்பி வரவேற்போம், அதுவரை அவருக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் இங்கிலாந்து வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.