மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டங்க்லி - டேனியல் வையட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் டங்க்லி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நாட் ஸ்கைவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அலிஸ் கேப்ஸி, கேப்டன் ஹீதர் நைட், எமி ஜோன்ஸ், கிப்சன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டேனியல் வையட் அரைசதம் கடந்ததுடன், 76 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். பின் 22 ரன்களில் பெத் மூனியும், தஹிலா மெக்ராத் 4 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 9 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய அலிசா ஹீலியும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி ஒரு பக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் கிரேஸ் ஹாரிஸ், அனல்பெல் சதர்லேண்ட், ஜார்ஜியா, ஜெஸ் ஜோனசென் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை போராடிய எல்லிஸ் பேரி அரைசதம் கடந்து 51 ரன்களை எடுத்த நிலையிலும் ஆஸ்திரேலிய 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் சாரா கிளென், சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய ம்களிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலையும் பெற்றது.