ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள்; சிக்கலை சந்திக்கும் அணிகள்!

Updated: Mon, May 13 2024 19:42 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் இத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன்படி வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், அதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 

இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் இங்கிலாந்து அணியும் இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பி வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

 

அதேபோல் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், வில் ஜேக்ஸ், மொயீன் அலி, சாம் கரண், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்களும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

 

அதிலும் குறிப்பாக பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பில் சால்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளதால் அந்த அணிகள் குவாலிஃபையர் சுற்றில் யாரைக் கொண்ட அவர்களது இடத்தை நிரப்பும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் கேகேஆர் அணியில் ரஹ்மனுல்லா குர்பானும், ராஜஸ்தான் அணியில் டாம் கொஹ்லர் காட்மோரும் இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை