ENG vs NZ, 3rd Test: தடுமாற்றத்தில் நியூசிலாந்து; மீண்டும் அசத்துவாரா மிட்செல்!
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நடந்துவருகிறது.
ஜூன் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, டேரைல் மிட்செலின் அபார சதத்தால்(109) முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது. டாம் பிளண்டெல் 55 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு டிரெண்ட் போல்ட் அதிர்ச்சியளித்தார். அலெக்ஸ் லீஸ்(4), ஜாக் க்ராவ்லி(6) மற்றும் ஆலி போப்(5) ஆகிய மூவரையும் ஒற்றை இலக்கத்தில் ஸ்டம்ப்பை கழட்டி வெளியேற்றினார். அதன்பின்னர் ஜோ ரூட் 5 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18 ரன்னிலும், பென் ஃபோக்ஸ் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 55 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இங்கிலாந்து அணி.
அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோவும் ஜாமி ஓவர்டனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடினர். ஜானி பேர்ஸ்டோவ் தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடினார். இங்கிலாந்து அணி இருந்த இக்கட்டான சூழலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி சதமடித்தார் பேர்ஸ்டோவ். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஓவர்டனும் அரைசதம் அடித்து சதத்தை கடந்தார்
2ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்துள்ளது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்திலும் பேர்ஸ்டோவ் - ஓவர்டன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஓவர்டன் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோவும் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 360 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன்பின் 31 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் டாம் லேதம் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கான்வே, ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டாம் லேதம் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.