இந்தியா அணி நிர்ணயிக்கும் இலக்கு குறித்து அச்சமில்லை - பால் காலிங்வுட்!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் அடித்தது.
அதன்பின் 99 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்தனர். ராகுல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் ரோஹித் சர்மா இந்த முறை சதமடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய புஜாராவும் சிறப்பாக விளையாட, இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 153 ரன்களை குவித்தனர்.
அதன்பின் ராபின்சன் வீசிய 81ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் சர்மா 127 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் 61 ரன்களுக்கு புஜாராவையும் வீழ்த்தினார் ராபின்சன். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் 174 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணிக்கு, கையில் இன்னும் 7 விக்கெட்டுகள் உள்ளன. எனவே இந்திய அணி சுமார் 300 ரன்கள் அல்லது அதற்கும் அதிகமாக இலக்கை நிர்ணயிக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் ,கண்டிஷன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி என்ன இலக்கு நிர்ணயித்தாலும், அதை இங்கிலாந்து சேஸ் செய்துவிடும் என்று இங்கிலாந்து ஃபீல்டிங் பயிற்சியாளர் பால் காலிங்வுட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதுகுறித்து பேசிய பால் காலிங்வுட், “கண்டிஷன் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி எவ்வளவு கடினமான இலக்கு நிர்ணயித்தாலும் இங்கிலாந்து அதைக்கண்டு அச்சப்படாது. 4ஆம் நாள் ஆட்டத்தில் பந்து நகர்ந்தால், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்து இந்திய அணியை அழுத்தத்திற்கு ஆளாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.