ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!

Updated: Wed, Jun 15 2022 14:36 IST
England vs New Zealand This is the FIRST Test match with 1000 plus runs scored in boundaries (Image Source: Google)

England vs New Zealand Nottingham Test 2022: உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்துள்ள நியூசிலாந்தை இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் 2ஆவது போட்டி ஜூன் 10ஆஆம் தேதியன்று டிரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கியது. 

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் அற்புதமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் டாம் லாதம் 26, வில் எங் 47, டேவோன் கான்வே 46, நிக்கோலஸ் 30 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் குவிக்க மிடில் ஆர்டரில் அபாரமாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் சதமடித்து 190 ரன்கள் குவித்தார்.

அவருடன் சிறப்பாக பேட்டிங் செய்த டாம் ப்ளண்டல் தனது பங்கிற்கு சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தும் தனது சொந்த மண்ணில் அபாரமாக பேட்டிங் செய்து 539 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக 3-வது இடத்தில் களமிறங்கிய ஓலி போப் சதமடித்து 145 ரன்கள் எடுக்க அவரைவிட முரட்டுத்தனமான பார்மில் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் சதமடித்து 176 ரன்கள் விளாசினார். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்தை அதன் 2-வது இன்னிங்ஸில் பெரிய ரன்களை எடுக்க விடாமல் மடக்கி பிடித்த இங்கிலாந்து 284 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. அந்த அணிக்கு வில் எங் 56, டேவோன் கான்வே 52 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுக்க மிடில் ஆர்டரில் மீண்டும் டார்ல் மிட்சேல் 62 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் போராடினாலும் இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்த 3 இன்னிங்ஸ் முடிவதற்கு நான்கரை நாட்கள் முடிந்து போனது. மேலும் கிட்டத்தட்ட உணவு இடைவேளைக்கு பின் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்தின் வெற்றிக்கு 299 ரன்கள் தேவைப்பட்டதால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்றே 99% ரசிகர்கள் நினைத்தனர். அதற்கேற்றார்போல் ஜாக் கிராவ்லி 0, ஓலி போப் 18, ஜோ ரூட் 3 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 56/3 என திணறியதால் இங்கிலாந்து தோல்வியடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் 44 ரன்கள் எடுத்த தொடக்க வீரர் லீஸ் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அதனால் 98/4 என திணறிய இங்கிலாந்தை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் முதலில் நிதானமாக பேட்டிங் செய்து மீட்டெடுத்தனர். அதனால் வெற்றி பெற முடியும் என்று நம்பிய அந்த அணிக்கு தேனீர் இடைவெளிக்குப் பின் அதாவது கடைசி 30 ஓவரில் வெற்றிக்கு 160 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தேனீரை குடித்துவிட்டு சொந்த மண்ணில் களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாட துவங்கினார்.

அவருக்கு பென் ஸ்டோக்ஸ் உறுதுணையாக நிற்க மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட ஜானி பேர்ஸ்டோ 14 பவுண்டரி 2 சிக்சருடன் வெறும் 92 பந்தில் சதமடித்து 136 ரன்களை 147.83 என்ற டி20 ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு பின் அந்த ஜோடி பிரிந்தாலும் கடைசி வரை நின்ற பென் ஸ்டோக்ஸ் 2019 ஆஷஸ் தொடரில் ஹெண்டிங்லே நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரசிகர்கள் மறக்க முடியாத மாஸ் பினிஷிங் கொடுத்ததைப் போல் 10 பவுண்டரி 4 சிக்சருடன் கடைசியாக பவுண்டரி அடித்து 75(70) ரன்கள் குவித்து வெறித்தனமான பினிசிங் கொடுத்தார்.

இதனால் 299/5 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஏற்கனவே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என சொந்த மண்ணில் முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் பவுண்டரிகளின் மூலம் மட்டுமே 1000 ரன்களை கடந்த முதல் டெஸ்ட் ஆட்டமாக நாட்டிங்ஹாம் டெஸ்ட் போட்டி சாதனைப் படைத்துள்ளது. 

அதன்படி இப்போட்டியில் 24 சிக்சர்கள், 226 பவுண்டரிகள் என மொத்தம் 1,046 ரன்கள் பவுண்டரிகள் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2004ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது 976 ரன்கள் பவுண்டரிகள் முலம் எடுக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

இதனை தற்போது நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி முறியடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை