ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
ENGW vs INDW, 2nd ODI: இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் 29 ஓவர்களாக குறைப்பட்ட தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவும் 42 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகாளில் தீப்தி சர்மா மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 29 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், எம் ஆர்லோட், லின்ஸி ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஏமி ஜோன்ஸ் மற்றும் டாமி பியூமண்ட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பர்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டாமி பியூமண்ட் 34 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்டும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் மீண்டும் மழை பெய்த காரணத்தால் இங்கிலந்து அணிக்கு 24 ஓவர்களில் 115 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
Also Read: LIVE Cricket Score
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏமி ஜோன்ஸ் 46 ரன்களையும், சோபியா டங்க்லி 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 21 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்துள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய சோஃபி எக்லெஸ்டோன் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.