ஆஷஸ் தொடரில் இது வாடிக்கையாக மாறிவிட்டது - டேவிட் மாலன்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது .
அதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவர் மட்டுமே நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தனர்.
மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால் ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்றது. பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய ஆஸி அணி ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் இழந்துள்ளது.
இந்நிலையில், நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாக டேவிட் மாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சீக்கிரம் விக்கெட்டை இழப்பது ஒரு போக்காக மாறி வருகிறது. ஏனெனில் நல்ல பார்ட்னர்ஷிப் அமையும் பொழுது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி விட்டால், அடுத்து வரும் வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பிவிடுகின்றன.
அப்படி ஒரு விக்கெட்டை இழக்கும் போது நாம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், முடிந்தவரை விரைவாக மற்றொரு பார்ட்னர்ஷிப்பைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.