மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சோஃபி எக்லெஸ்டோன்!

Updated: Thu, May 30 2024 15:03 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் முடிவில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியே முன்னிலைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செம்ஸ்ஃபோர்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியானது 178 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய சோஃபி எக்லெஸ்டோன் தொடர் நாயகி விருவதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் சாதனை ஒன்றையும் நிகழ்த்தி அசத்தியுள்ளார். 

 

அதன்படி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக்கின் சாதனையை இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கேத்ரின் 64 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது சோஃபி 63 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை வீழ்த்து சாதனை படைத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை