ENGW vs INDW: பியூமண்ட் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டோவ்விலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மிதலி ராஜ், பூனம் ராவத் ஆகியோரை தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியாறினர்.
இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 72 ரன்களையும், பூனம் ராவத் 32 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் எக்ளஸ்டோன் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நேக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் லாரன் வின்ஃபீல்ட் ஹீல், ஹீத்தர் நைட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் டாமி பியூமண்ட் - நாட்டலியா ஸ்கைவர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
இதனால் 34.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக டாமி பியூமண்ட் 87 ரன்களையும், நட்டாலியா ஸ்கைவர் 74 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றது.