இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது
அதன்படி, களமிறங்கிய இந்திய 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் 221 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 59 ரன்களையும், ஷஃபாலி வர்மா 44 ரன்களையும்ச் சேர்த்தனர்.
இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேட் கிராஸ் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் பியூமண்ட், ஹீத்தர் நைட், நாட் ஸ்கைவர், ஏமி ஜோன்ஸ், என முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரன் வின்ஃபீல்ட் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பாட்ட நிலையில் 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால் அதன்பின் களமிறங்கிய சோபியா டாங்க்லி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.
இதனால் 47.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.