ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இந்திய அணியின் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்டு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
ஆனால் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா அரைசதம் கடந்து ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பியூமண்ட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் ஜோடி சேர்ந்த டேனியல் வியாட் - நடாலி ஸ்கைவர் இணை இந்திய அணி பந்துவீச்சை துவம்சம் செய்தது.
இதில் டேனியல் வியாட் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 18 .4 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்து அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் வியாட் 89 ரன்களைச் சேர்த்து, ஆட்டநாயகி விருதையும் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.