ENGW vs NZW: 3 ரன்னில் சதத்தை தவறவிட்ட பியூமண்ட்; இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பியூமண்ட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 97 ரன்களில் ஆட்டமிழந்து வாய்ப்பை நழுவவிட்டார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜென்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஏமி சட்டெர்ட்வைட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மற்ற வீராங்கனைகள் அடுதடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்தின் தோல்வி உறுதியானது.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இறுதியில் 18.5 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டாமி பியூமண்ட் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.