பாகிஸ்தான் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் 8 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 8 ரன்களிலும் விக்கெட்டை இழக்க அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை டேனியல் வையட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டேனியல் வையட் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 87 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 12 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி ஒரு ரன்னிலும், டேனியல் கிப்சன் 13 ரன்களிலும், எமி ஜோன்ஸ் 26 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் டையான பைக் மற்றும் கேப்டன் நிதா தார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு குல் ஃபெரோசா - சித்ரா அமீன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் சித்ரா அமீன் 26 ரன்களிலும், குல் ஃபெரோசா 30 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய சதாஃப் ஷமாஸ் மற்றும் முனீபா அலி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த கேப்டன் நிதா தார் - அலியா ரியாஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதா தார் 29 ரன்களையும், அலியா ரியாஸ் 35 ரன்களை சேர்த்த நிலையிலும் பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 142 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News