கேலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சல்மான் பட்!

Updated: Wed, Jul 20 2022 14:38 IST
Even Babar Azam wants to see Virat Kohli score runs, states Salman Butt (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். 15ஆவது ஐபிஎல் சீசனில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 341 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆன விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிமும் ஏமாற்றினார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி வெறும் 76 ரன்களை மட்டுமே அவர் அடித்தார். இதனையடுத்து இந்திய அணியில் இனி விராட் கோலியின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து விராட் கோலிக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கோலிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், ''பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூட, விராட் கோலி ரன் அடிப்பதைப் பார்க்க விரும்புகிறார். விராட் கோலி ஒரு பெரிய வீரர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தவொரு வீரருக்கும் மோசமான காலங்கள் வரும். சில சமயங்களில் அவர்கள் நீண்ட நாட்களாக விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கலாம். ரசிகர்கள் உங்களை நம்புவதை நிறுத்தி விடுவார்கள். இது மனித இயல்பு. ஆனால், வீரர்கள் எப்போதும் ஃபார்முக்கு திரும்பி வருவார்கள். 'ஃபார்மை இழந்து விட்டார்' என்று திரும்பத் திரும்பச் சொல்லாமல் அவரை ஆதரிக்க வேண்டும்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எந்த பேட்ஸ்மேன்தான் தடுமாறவில்லை? ரோகித் சர்மா கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களால் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்கிறார். எனவே, தடுமாற்றம் என்பது விராட் கோலிக்கு மட்டுமில்லை. மற்ற பேட்டர்களுக்கும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன'' என்று பட் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வை பயன்படுத்தி  அவர் கம்பேக் தருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை