ஐபிஎல் 2022: இந்த சீசனில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம் - பும்ரா விளக்கம்
மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 2ஆவது வாரத்தைக் கடந்து ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்து வருகிறது. இந்த வருடம் இதுவரை 20+ போட்டிகளை நடைபெற்றாலும் அதில் ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் கடைசி ஓவர் வரை சென்று பல பரபரப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன.
இந்த வருடம் ராஜஸ்தான், பெங்களூரு ஏன் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ, குஜராத் போன்ற அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் வெற்றி நடை போடுகின்றன. ஆனால் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளிப் பட்டியலில் அடிபாகத்தில் திண்டாடுகின்றன.
அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் என சரித்திர சாதனை படைத்த ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 10 வது இடத்தில் தவிக்கிறது. அந்த அணியில் பேட்டிங்கில் இசான் கிசான், சூர்யகுமார் யாதவ் போன்றவர்களால் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சு படு மோசமாக இருப்பது அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றியது.
அதிலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கைகொடுக்க வேறு எந்த ஒரு நல்ல தரமான பவுலரும் இல்லாததால் அந்த அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இனி வரும் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையின் தோல்விக்கு டாஸ் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக அந்த அணியின் நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர்,“என்னை கேட்டால் டாசில் வெற்றி பெற வேண்டும். அது நிச்சயமாக நிறைய உதவி செய்யும். அது நல்ல லைன், ஸ்விங் செய்வது போன்ற விஷயங்களில் நிச்சயமாக உங்களுக்கு உதவும். ஏனெனில் ஆரம்ப கட்ட ஓவர்களுக்கு பின் முதல் அல்லது 2ஆவது இன்னிங்ஸ் என எதுவாக இருந்தாலும் பனியின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற அம்சங்கள் இதர பந்துவீச்சாளர்களுக்கும் உதவும். எனவே இந்த விஷயத்தில் கவனத்தை செலுத்தி எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போம்.
எங்கள் அணி தற்போது வீரர்களின் மாற்றத்திற்கான நேரத்தில் இருந்து வருகிறது. இதை அனைத்து வீரர்களும் அறிவார்கள். அனைத்து அணைகளுக்கும் இது ஏற்படும். நாங்கள் புதிய வெற்றிக் கூட்டணியை உருவாக்க வேண்டியுள்ளது.
மாற்றத்திற்கான தருணத்தில் இருக்கும் நாங்கள் விரைவில் கடந்த காலங்களில் இருந்த தரமான வீரர்களை போலவே இப்போதும் கண்டறிந்து மீண்டு வருவோம். இப்போது நாங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறோம் என்பதால் அதை சமாளிக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம். இருப்பினும் நாங்கள் தொடர்ந்து வெற்றிக்கான வழியை கண்டறிந்து போராடிக் கொண்டே இருப்போம். அந்த வகையில்தான் கிரிக்கெட் எப்போதும் வேலை செய்யும். சவால்கள் வரும்போது அதற்கான தீர்வுகளை கண்டறிவது போல நாங்களும் இப்போதைய நிலைமையை சமாளிப்பதற்கான தீர்வுகளை கண்டறிந்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.