தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோமா? ஹர்பஜன் கேள்வி!
கடந்த 2011ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியில் அப்போது ஹர்பஜன் சிங்கும் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கவுதம் கம்பீர் 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் தோனி திடீரென 5ஆவது வீரராக களமிறங்கி 91 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதற்கு முன் நடந்த லீக் ஆட்டங்களில் 5ஆவது வீரராக யுவராஜ் சிங்தான் களமிறங்கியிருந்தார்.ஆனால், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபின் ஆட்டநாயன் விருது தோனிக்கு வழங்கப்ட்டது. கம்பீரின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டு,புறக்கணிக்கப்பட்டது. அதன்பின் தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றோம் என்று தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது
இந்நிலையில் கிரிக்கெட் தொடர்பான நேரலை நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்கள் முகமது கைஃப், ஹர்பஜன் சிங் இருவரும் நேற்று பங்கேற்றனர். அவர்கள் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் குறித்து விவாதித்தனர்.
அப்போது முகமது கைஃப் கூறுகையில் “ டெல்லி கேபிடல்ஸ் கேப்டனாக இருந்தபோது ஸ்ரேயாஸ் அய்யர்தான் இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றார். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை கொல்கத்தா அணி வென்றபோது, அந்த அணியின் கேப்டனாக தற்போது இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. வெற்றி பெற வேண்டும் என மட்டுமே நினைத்தார்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங் பேசுகையில் “ ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும்தான் டெல்லி கேபிடல்ஸ் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றாரா. மற்ற வீரர்கள் அனைவரும் உதவவில்லையா. அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றபோதும் இதே பேச்சுதான் வந்தது. தோனியால் உலகக் கோப்பையை வென்றோம் என்றனர்.
உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றால், ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது என்கிறோம். இந்தியா வென்றபோது மட்டும் அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தோனியால்தான் உலகக் கோப்பையை வென்றது என்றனர். அப்படியென்றால் மற்ற 10 வீரர்களும் லஸ்ஸி சாப்பிட்டார்களா.
10 வீரர்களும் என்ன செய்தார்கள். கவுதம் கம்பீர் பங்களிப்பு தெரியுமா, மற்ற வீரர்கள் பங்களிப்பு தெரியுமா. உலகக் கோப்பையை வென்றது அணியின் ஒட்டுமொத்த உழைப்பு. 7 முதல் 8 வீரர்கள் சிறப்பாக ஆடினால்தான் வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்