விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்திய அணி தயாராகியிருக்கும் - ரஷித் லதீஃப்!

Updated: Thu, Aug 17 2023 16:34 IST
Image Source: Google

விண்டீஸ் அணியுடனான கிரிக்கெட் தொடரை நிறைவு செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக அயர்லாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும், அதன்பின் ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டமர் 17ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த போட்டி மீது வழக்கம் போல் அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர் என்றால் அது மிகையல்ல. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரிய குழப்பமே நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது தற்காலிக அணிகளையே அறிவித்துவிட்டு முழு தயாராக இருக்கும் நிலையில், இந்திய அணியோ டீமில் யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் இந்திய அணியின் தேவையற்ற முயற்சிகளும், தேவையற்ற மாற்றங்களும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரரான ரசீத் லத்தீப், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு 100 சதவீதம் தயாரான வலுவான அணியாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷித் லதீஃப், “இந்திய நிர்வாகம் பல வீரர்களை வைத்து தேவையற்ற பரிசோதனைகளை நடத்தி வருகிறது. புதிய வீரர்களை நிலை நிறுத்த அனுமதிக்காததால் தேர்வு முறையில் திணறி வருகிறது. அதனால் தான் சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இழந்தது. உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சீனியர் வீரர்களை நம்பிதான் இருக்கிறது. கேப்டன்களின் மாற்றம் இந்திய அணிக்கு உதவவில்லை என்பது சந்தேகம் இல்லை. 

இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் வேகமான ஸ்ட்ரைக் ரேட் தேவைப்படும் இடத்தில் தடுமாறுவதாக நான் பார்க்கிறேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணி வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஸ்வீப் ஆடுவதை அஸ்திரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல பேட்டிங் ஆர்டரில் இந்திய அணி மிடில் மற்றும் லோயர் ஆர்டரை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பது அவர்கள் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். புதிதாக வரும் வீரர்கள், தங்களை அந்த இடத்தில் நிலைநாட்ட முடியாமல் போவதற்கு அதுவே காரணம். மேலும், இந்திய அணி விராட் கோலியை கேப்டனாக தொடரச் செய்ய வேண்டும். அதைச் செய்தால் இந்திய அணி உலகக் கோப்பைக்கு தயாராகிவிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை