இப்போட்டியின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது - பாட் கம்மின்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஷபாஸ் அஹ்மத் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 89 ரன்களையும், ஷபாஸ் அஹ்மத் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 59 ரன்களையும், அபிஷேக் சர்மா 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்துடன் 65 ரன்களையும், அபிஷேக் போரல் 42 ரன்களையும், நிதானமாக விளையாடிய ரிஷப் பந்த் 44 ரன்களயும் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இங்கு மீண்டும் சிறப்பான ஆட்டம் நடைபெற்றுள்ளது. மற்றொரு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தோம். அதன் பின்னர் டெல்லி அணி விளையாடும்போது பவர்பிளே ஓவர்களில் எங்களால் பெரிய அளவில் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் நேரம் செல்ல செல்ல எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
முதல் பாதியில் எங்களது பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரது பேட்டிங்கை பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தது. பின்னர் இரண்டாவது பாதியில் பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பான முறையில் பந்து வீசியிருந்தோம். எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் தங்களது திட்டத்தை சரியாக வகுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.