கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Dec 25 2023 10:31 IST
கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் - ராகுல் டிராவிட்! (Image Source: Google)

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்சுரியன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியுடன் டக்ஸ் ஓவல் மைதானத்தில் இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடியது.

தென் ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றதில்லை. இதனால் இம்முறை புதிய வரலாறு படைக்க இந்திய அணி வீரர்கள் தீவிரமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட் கேஎல் ராகுல் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங் செய்யவுள்ளார்.

ஆனாலும் 5 நாட்கள் நடைபெறக்கூடிய டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வது கேஎல் ராகுல் போன்ற பகுதி நேர விக்கெட் கீப்பர்களுக்கு அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்ஜ், கேட்ச் ஆகியவற்றை பிடிப்பதில் கீப்பர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும் அது வெற்றியையே பறிக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

அதனால் முழுநேர விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் கீப்பிங் இத்தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் பேட்டிங்கில் அசத்தக்கூடிய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “கேஎல் ராகுலுக்கு இது வித்தியசமான சவாலாகும். அதேபோல் அவருக்கு இது சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். இஷான் கிஷனும் அணியில் இல்லாததால், கேஎல் ராகுலை தேடி இந்த வாய்ப்பு வந்துள்ளது. இதனை சிறப்பாக செய்ய முடியும் என்று கேஎல் ராகுலும் உறுதியாக உள்ளார்.

அவர் முழு நேர விக்கெட் கீப்பர் கிடையாது. 50 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்டு, அதன்பின் பேட்டிங் செய்வதே கடினமான ஒன்றாகும். உடல்ரீதியாக அதிக எனர்ஜியும், மனதளவில் உறுதியும் இருக்க வேண்டும். இதற்காக கடந்த 5 முதல் 6 மாதங்கள் சிறப்பாக தயாராகி வந்துள்ளார். அதேபோல் தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிகமாக பந்து ஸ்பின்னாகாது என்பதால், கேஎல் ராகுல் பணிகள் கொஞ்சம் சுலபமானதாக நினைக்கிறேன்.

இந்திய அணியின் காம்பினேஷனை ஆடுகளம் மற்றும் வானிலை ஆகியவற்றை பார்த்த பின்னரே முடிவு செய்வோம். அதேபோல் வானிலை ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது என்பதால், அன்றைய நாளில் முடிவெடுப்பது சரியானதாகும். அதேபோல் இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் அல்லது 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னராக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை