மைதானத்திற்கு வெளியே சென்ற பந்து; டூ பிளெசிஸ் மிரட்டல்!
பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய வந்த விராட் கோலி இந்த முறை ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 61 ரன்களை, தலா நான்கு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கேப்டன் ஃபாஃப் விராட் கோலி இருக்கும் வரை பொறுமை காட்டி அதற்குப் பிறகு தனது வழக்கமான அதிரடியில் ஈடுபட்டார். விராட் கோலி 11.3 ஓவரில் ஆட்டம் இழந்த காரணத்தால் மூன்றாவது விக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேக்ஸ்வெல் ஒரு பக்கத்தில் தனது வழக்கமான பாணியில் விளையாட தொடங்கினார். இந்த இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்களும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக லக்னோ அணி பந்துவீச்சாளர்களை வதம் செய்யத் தொடங்கினார்கள். இவர்களது பேட்டில் இருந்து பந்துகள் சிக்ஸர்களாக பறந்தன.
பின் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் ஒரு அருமையான சிக்சர் அடித்து, அடுத்து உடனே மிட் விக்கெட் திசையில் 115 மீட்டர் தொலைதூர சிக்ஸர் ஒன்றைப் பறக்க விட்டு மிரள வைத்தார். இவர் அடித்ததை பார்த்த மேக்ஸ்வெல் அதை நம்ப முடியாமல் நின்றார். இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இருவரும் சேர்ந்து 50 பந்துகளில் 115 ரன்கள் விளாசி லக்னோ அணியை மொத்தமாக சோர்வடையச் செய்து விட்டார்கள். இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் பாப் 46 பந்தில் 5 சிக்சர் ஐந்து பவுண்டரி உடன் 79 ரன்கள் எடுத்தார். கடைசிப் பந்துக்கு முன் பந்தில் ஆட்டம் இழந்த மேக்ஸ்வெல் 29 பந்துகளில் மூன்று பவுண்டரி 6 சிக்ஸர்கள் உடன் 59 ரன்கள் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி இரண்டு விக்கட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்திருக்கிறது.